Friday, November 30, 2007

372. டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் கார்

இது சீக்கிரமே மார்கெட்டுக்கு வந்து விடும் என்று நம்பப்படுகிறது. குறைந்த விலையில் மிக அழகான டிசைனுடன் கூடிய காரைப் பார்த்தாலேலே, வாங்குவதற்கு ஆசை வந்து விடும் :)

Photo Sharing and Video Hosting at Photobucket

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, November 22, 2007

ரஜினி ராம்கியை வாழ்த்துவோம் !

நண்பர்களே,

ஒரு நல்ல செய்தி. நேற்று காலை, நண்பர் ரஜினி ராம்கிக்கு "அப்பா" என்ற அந்தஸ்து கிட்டியது :) அவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, அவரது குட்டி மகளின் நீண்ட ஆயுளுக்கு பிரார்த்திப்போம் ! "புதிய" தந்தையின் இப்போதைய கவலை, மகளின் விடாத அழுகை :)

எ.அ.பாலா

Wednesday, November 14, 2007

370. நந்திகிராம் vs அணுசக்தி ஒப்பந்தம் - கம்யூனிஸ்ட்களின் பல்டி

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தீவிர எதிர்ப்பு காட்டி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ, சிபிஐ(M)) தற்போது தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து, இந்தியா IAEAவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதற்குக் காரணம், நந்திகிராம் விவகாரம் என்றால் அது மிகையாகாது!  நந்திகிராம் பிரச்சினையினால் சிபிஐ(M) பலதரப்பு நெருக்கடிகளை எதிர்கொண்டு, பெரும் சிக்கலில் உள்ள நிலையில், இந்த பல்டியை ஆளும் காங்கிரசுடன் செய்து கொண்ட 'பேரமாக' மட்டுமே பார்க்க இயலுகிறது.  இல்லையென்றால், இவர்களின் இந்த திடீர் 'ஞானோதயத்திற்கு' வேறென்ன காரணம் இருக்க இயலும் ??? 

அதனால் தான் என்னவோ, நந்திகிராமில் சரியான நேரத்தில் / தேவையான நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து மேற்கு வங்க அரசை கவர்னர் கடுமையாக சாடிய பின் கூட, நமது பிரதமரோ, எங்கு பிரச்சினை என்றாலும் ஓடிச் சென்று விசாரிக்கும் சோனியா காந்தியோ, இந்தப் பிரச்சினையில் வாய் மூடி மௌனமாக உள்ளனர்!  வேறு ஏதாவது கட்சி ஆட்சி நடத்தும் மாநிலமாக இருந்திருந்தால், மத்திய அரசு மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கும். ஏன், கவர்னர் ஆட்சியே ஏற்பட்டிருக்கலாம் ! 

இந்தப் பிரச்சினையில் உச்ச்க்கட்ட காமெடி என்னவென்றால், மாவோயிஸ்ட்களுடன் சேர்ந்து கொண்டு மம்தா பானர்ஜி வன்முறை செய்வதாக பிரகாஷ் கரத் திருவாய் மலர்ந்திருப்பது தான் !  பிரச்சினையை சுமுகமாக தீர்க்க ஒரு எழவும் செய்யாமல், கவர்னரின் நியாயமான பேச்சுக்கு சிபிஐ(M) கடுமையான கண்டனம் வேறு தெரிவிக்கிறது.

கம்யூனிஸ்ட்கள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த நிலைப்பாட்டிலிருந்து மொத்தமாக பல்டி அடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று ஏற்கனவே ஒரு <a href="http://balaji_ammu.blogspot.com/2007/08/352-123.html ">பதிவில்</a> குறிப்பிட்டிருந்தேன்.  அப்படி நடந்து, ஒப்பந்தம் கையெழுத்தானால், நாட்டின் மொத்த எனர்ஜி தேவையில் 5% மட்டுமே பூர்த்தி (அதுவும் 2020-இல்) செய்யக்கூடிய, விலை அதிகம் தந்து பெற வேண்டிய அணுசக்திக்காக என்ற போர்வையில், (ஒரு பிரதமரின் விருப்பத்திற்காக மட்டும்) அமெரிக்காவின் அடிவருடியாக நாம் காலம் தள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் !

அணு ஆயுத பரிசோதனை செய்யும் நமது சுதந்திரத்திற்கும், தேசிய பாதுகாப்பு நலனுக்கும் எதிராக இருக்கும் Hyde Act பற்றிய குறிப்பு 123 ஒப்பந்தத்தில் இருக்கும் வரை, இந்த ஒப்பந்தம் நிச்சயம் ஏற்க இயலாத ஒன்று.
 

எ.அ.பாலா

*** 370 ***

Tuesday, November 06, 2007

369. உடல் நலத்தை கெடுக்கும் தீபா'வலி'

வர வர தீபாவளியை நினைத்தால அலர்ஜியாக இருக்கிறது. ஒரு வாரம் முன்பே பட்டாசு சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்து விடுகிறது. பிறந்ததிலிருந்து, இந்த ஆறு வருடங்களாக, என் இரண்டாவது மகளுக்கு தீபாவளி என்றாலே நடுக்கம் தான். இந்த சத்தமும், புகையும் அவளை வெகுவாக பாதிப்பதால், ஒவ்வொரு தீபாவளி அன்றும் அவளுக்காக வீட்டுக்கதவுகளையும், சன்னல்களையும் திறக்கவே மாட்டோ ம்! நேற்று NDTV-யில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். இந்த பட்டாசுகளால் எவ்வளவு பெரிய உடல் நலக்கேடு என்பது தெளிவாக விளங்கியது. சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு:

1. 2005-இல் உச்சநீதி மன்றம் 120 டெசிபல்களுக்கு மேலாக ஒலிச்சக்தி கொண்ட பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ தடை விதித்திருந்தது. ஆனால், அதை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. இப்போதுசந்தையில் உள்ள 90% பட்டாசுகள் (ஊசிப் பட்டாசு, வெங்காய வெடி போன்றவற்றைத் தவிர!) 140 டெசிபல்களுக்கு மேல் ஒலி ஏற்படுத்தபவையே! நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, பட்டாசின் அட்டையின் மீது 'தயாரித்த மாதம்' மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும், எந்த 'வருடம்' என்ற தகவல் இருக்காது. மாட்டிக் கொண்டால், அந்த பட்டாசு 2005-க்கு முன் தயாரிக்கப்பட்டது என்று சுலபமாக கூறி தப்பி விடலாம்! அது போலவே, 10 மணிக்கு மேல் வெடி வைக்கக் கூடாது என்ற கோர்ட் / போலீஸ் உத்தரவையும் யாரும் கண்டு கொள்வது கிடையாது.

2. பட்டாசு வெடிப்பதால் மூன்று வித தீங்குகள் ஏற்படுகின்றன. ஒன்று, அதிலிருந்து வரும் ஒளி கண்ணுக்குக் கெடுதல், இரண்டு, வெடிச்சத்தத்தால் கேட்கும் திறனுக்கு பாதிப்பு என்பதுடன், முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒருவித trauma ஏற்படுகிறது. நோயாளிகள் எத்தனை அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள் என்பதை சற்று யோசித்தால், குறைந்தபட்சம் பெரும் சத்தம் ஏற்படுத்தும் வெடிகளையாவது வெடிக்காமல் இருப்போம்.

மூன்று, பட்டாசுப் புகையில் உள்ள நச்சு (சல்பர், பாஸ்பரஸ் .. சார்ந்த) வாயுப்பொருட்கள், காற்றில் suspended particles ஆக மிதந்து, அக்காற்றை நாம் சுவாசிப்பதால், நுரையீரலுக்கும், மூச்சுக் குழாய்க்கும் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழி வகுக்கிறது. அந்த நச்சுப் புகையால், கண்களுக்கும், தோலுக்கும் கூட கெடுதல் விளைகிறது.

3. அந்த ஒரு நாளில் மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசை கொளுத்தி/வெடித்து கரியாக்குகிறோம். இப்படி ஒவ்வொருவரும் கரியாக்கும் பணத்தை அநாதை இல்லங்களுக்கோ, தர்ம ஸ்தாபனங்களுக்கோ வழங்கினால் கொஞ்சம் மன நிம்மதியாவது பதிலுக்கு பெற இயலும்!

4. சுற்றுச்சூழலுக்கு பட்டாசின் நச்சுப்புகையால் எத்தகைய மாசு ஏற்படுகிறது என்பதை சொல்லி மாளாது. தீபாவளியை வெடி வைக்காமல் கொண்டாட முடியாது என்ற பட்சத்தில், அதற்கு ஒரு மாதம் முன்பாகவே, நாம் நமது இரு/நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை தீபாவளி வரை தவிர்த்து, அதனால் சுற்றுச்சூழலுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்து, பின் தீபாவளி அன்று "போனஸாக" கொஞ்சம் பட்டாசு கொளுத்தி மகிழலாம் :)

5. நகரமெங்கும் வெடிக்காமல், ஒரு சில நிர்ணயிக்கப்பட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிக்கலாம். இப்போதெல்லாம் பலர், தீபாவளி அன்று நகரங்களின் பட்டாசு இரைச்சல் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க, அமைதியான இடங்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

6. நமது சிவகாசிப் பட்டாசுகள் போதாதென்று, தற்போது சீனப் பட்டாசுகள் சந்தைக்கு வருகின்றன. இவை நம் பட்டாசுகளை விட (நம்மையும், சுற்றுச்சூழலையும்) அதிகம் பாதிக்கின்றன. ஆனால், இந்த சீன ஃபேன்ஸி வகைப் பட்டாசுகளுக்கு சந்தையில் நல்ல மவுசு உள்ளது.

நாமாக, பிரச்சினையை உணர்ந்து திருந்துவதில்லை, சட்டம் போட்டாலும் அதை மதிப்பதில்லை :(
நமது சந்ததிகளுக்கு என்ன மாதிரி (வாழ்வதற்கு மிகக் கடினமான) ஒரு பூமியை விட்டுச் செல்ல இருக்கிறோம் என்பதை நம்மில் பலர் சிந்திப்பதில்லை என்பது தான் மிக்க வேதனைக்குரியது.

Anyway, நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 369 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails